×

குடிமைப் பணி தேர்வில் 3ம் முறையாக கலந்து கொண்டு வெற்றி பெற்று இளைஞர்களுக்கு வழிகாட்டும் பீடித்தொழிலாளி மகள் இன்பா: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து


சென்னை: ஒன்றிய அரசின் குடிமைப் பணி தேர்வில் மூன்றாம் முறையாகக் கலந்து கொண்டு விடாமுயற்சியால் வெற்றி பெற்று, இளைஞர்களுக்கு வழிகாட்டும் பீடித்தொழிலாளி மகள் இன்பாவுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை: குரூப் 1 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் ஒருவர், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கனவு திட்டமான, நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி பெற்றுத் தேர்ச்சி பெற்றவர் என்ற செய்தி வெளியாகி நான் முதல்வன் திட்டத்தின் வெற்றியைப் பறைசாற்றியது. இம்முறை குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்றவர்களில் பலர் மிகவும் ஏழ்மையான நிலையில் தனது சொந்த முயற்சியில் வீட்டிலிருந்தே படித்து வெற்றி பெற்றுள்ளனர் எனும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரிகின்ற மூன்று பெண் ஊழியர்கள் ஒரேநேரத்தில் குரூப் 1 தேர்வில் தேர்ச்சி பெற்று அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏறப்படுத்தியுள்ளனர். அதேபோல, தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த பீடி சுற்றும் தொழிலாளி ஒருவரின் மகள் எஸ்.இன்பா என்பவர், ஒன்றிய அரசின் குடிமைப் பணிகள் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ஏழ்மையான ஒரு பீடிதொழிலாளியின் மகள். இவர் பொருளாதார வசதி இல்லாததால், வீட்டிலிருந்தே படித்துள்ளார். இவர் ஏற்கனவே இரண்டு முறை ஒன்றிய அரசின் குடிமைப் பணிகள் தேர்வு எழுதியும் தேர்ச்சி பெறவில்லை. எனினும், இன்பா விடாமுயற்சியுடன் மூன்றாவது முறையாக தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளார். இவர் அகில இந்திய அளவில் 851-வது இடத்தை பெற்றுள்ளார்.

இன்பா, நான் முதல்வன் திட்டத்தின் மூலம் மாதம் ரூ7500 உதவித்தொகை பெற்று இத்தேர்விற்கு படித்து வந்தார். 2023ம் ஆண்டு ஒன்றிய அரசின் குடிமைப் பணிகள் தேர்வின் முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றதையடுத்து மாதம் ரூ25,000 உதவித்தொகை பெற்றார். தமிழ்நாடு அரசின் நான் முதல்வன் திட்டத்தின் மூலம் கிடைத்த உதவித்தொகையால் பொருளாதார தேவை பற்றிய கவலையின்றி இன்பாவால் முழு கவனத்துடன் இத்தேர்விற்காக படித்து வெற்றி பெற முடிந்தது. படிப்புக்கு ஏழ்மை ஒரு தடையில்லை, முயன்றால் படித்து முன்னேறலாம். வெற்றி முகட்டைத் தொடலாம் என்பதை இன்றைய இளைஞர்களுக்கு உணர்த்துவதாக இன்பா வாழ்க்கையும், அவரது விடாமுயற்சியும் வழிகாட்டுகின்றன.

மே முதல் நாள் தொழிலாளர் திருநாள் பீடி சுற்றும் ஒரு தொழிலாளியின் மகள் இன்பா விடாமுயற்சியுடன் படித்து, வென்று உயர்அதிகாரியாகப் பொறுப்பேற்கவிருக்கும் செய்தி அனைவருக்கும் முன்னுதாரணமாக அமைந்துள்ளது. மே தின வாழ்த்துகளை இன்பாவுக்கும், அவருடைய பெற்றோருக்கும் அனைவரும் கூறி பாராட்டுகிறார்கள். இவ்வாறு தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post குடிமைப் பணி தேர்வில் 3ம் முறையாக கலந்து கொண்டு வெற்றி பெற்று இளைஞர்களுக்கு வழிகாட்டும் பீடித்தொழிலாளி மகள் இன்பா: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Inba ,Principal ,M.U. K. ,Stalin ,Chennai ,Tamil Nadu ,Chief Minister ,Union Government ,K. Stalin ,Government of Tamil Nadu ,Civic Work Examination ,M.U. K. Stalin ,
× RELATED என் கனவுதிட்டமாக தொடங்கி பலரது...